கோலாலம்பூரில் மலேசியத் தலைவர்களைச் சந்தித்த நாடாளுமன்ற நாயகர் 

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்து அதன் நாடாளுமன்றக் கூட்டத்தைப் பார்வையிட்டார். “நாடாளுமன்ற நாயகராக நான் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இது. அண்டை நாட்டுக்குப் பயணம் செய்வது ஏற்புடையதே,” என்று திரு டான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“நாடாளுமன்ற அளவில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருப்பதால் நான் வழக்கத்தைவிட பெரிதான குழுவை உடன் அழைத்துச் சென்றிருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வசித்து அங்கு வேலை செய்யும் சிங்கப்பூரர்களையும் திரு டான் அந்நாட்டிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இரவு விருந்து நிகழ்ச்சியின்போது சந்திப்பார். 

மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நாடாளுமன்ற நாயகர் முகம்மது அரிஃப் முகம்மது யூசொஃப்,  மேலவைத் தலைவர் எஸ். ஏ விக்னேஸ்வரன் ஆகியோரை சிங்கப்பூர் குழுவினர் சந்தித்தனர். திரு விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் சிங்கப்பூரின் நீண்ட கால பொது வீடமைப்பு உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைப் பற்றி இரு தரப்புத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

“சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் என்ற முறையில் திரு டான் எங்களைக் காண வந்திருந்தது இதுவே முதல் தடவை. இவரை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று திரு விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நீண்ட வரலாறு இருக்கும் பட்சத்தில், இரு நாட்டு உறவுகளில் சர்ச்சைகள் எழுந்தாலும் இரு நாடுகளும்  பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

திரு டானுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், பிரித்தம் சிங், மெல்வின் இயோங், யீ சியா சிங், ஜோன் பெரேரா, ஹென்ரி குவெக், சக்தியாண்டி சுபாட், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் எந்தியா ஓங் ஆகியோர் சென்றுள்ளனர்

இந்த மூன்று நாள் பயணத்தை அவர் புதன்கிழமை (மார்ச் 20) முடித்துக்கொண்டு தாயகம் திரும்புவார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon