சமூக ஊடகங்களில் அமைச்சர் பெயரில் போலி கணக்குகள்

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் தமது பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
அந்தப் போலிக் கணக்குகள் குறித்து பொதுமக்களில் சிலர் தமக்குத் தகவல் தந்ததாக திரு சண்முகம் ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்துள்ளார்.
சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றார் அமைச்சர் சண்முகம்.
சமூக ஊடகங்களில் ஒரு கணக்கை நிர்வகிப்பதற்கே அதிக நேரமும் முயற்சியும்  தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை, அதிலும் போலிக் கணக்குகளை, எப்படிக் கையாள்கின்றனர் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்றும் சொன்னார்.  முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் தரவேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.