நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தண்டனையை எதிர்நோக்கும் ஆர்வலர்கள் இருவர்

சிங்கப்பூரின் நீதிமன்றங்களைப் பற்றிய அவதூறான கருத்துகளைக் கொண்டுள்ள ஃபேஸ்புக் பதிவை எழுதிய ஜோலோவன் வாமிற்கு 10,000 வெள்ளி முதல் 15,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படவேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கோரி வருகின்றனர். வாமின் வழக்கைப் பற்றி ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த எதிர்க்கட்சி அரசியல்வாதி ஜோன் டான் லியாங் ஜூக்கு குறைந்தது 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இவர்கள் இருவருமே நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

சிங்கப்பூரின் நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் சந்தேகிக்கத் தூண்டும்படியான விதத்தில் இவர்கள் எழுதியிருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் செந்தில் சபாபதி புதன்கிழமை தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவருமே மன்னிப்பு கேட்டு தங்களது பதிவுகளை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட அவர் கேட்டுள்ளார்.

திரு டான் பல முறை குற்றங்களைச் செய்திருப்பதாக திரு சபாபதி தெரிவித்தார்.

நீதிபதியின் உடையை அணிந்த கங்காரு விலங்கின் படத்தைக் கொண்டுள்ள டி-சட்டை அணிந்ததற்காக டான் 2009ஆம் ஆண்டின் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தச் சட்டையைத் தான் அணிந்திருந்ததைக் காட்டும் படம் ஒன்றைச் சமூக ஊடகங்களில் அவர் பதிவேற்றம் செய்த குற்றமும் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

அரசியல் விவகாரங்களைச் சார்ந்த வழக்குகளில் மலேசிய நீதிமன்றங்களுக்கு நிகரான சுயேட்சையுடன் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் செயல்படுவதில்லை என்று வாம் கடந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினார். “போலி செய்திகளுக்கு எதிரான சட்டத்திற்கு எதிராக மலேசியகினி அரசமைப்புச் சட்ட ரீதியான சவாலை விடுக்கிறது” என்ற தலைப்பைக் கொண்ட இணையக் கட்டுரை ஒன்றின் இணைப்பை வாம் அந்தப் பதிவில் இணைத்தார்.

இதனை அடுத்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாமுக்கு எதிராக தொடர்ந்தது. 

2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடப்புக்கு வந்த நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர்களாக வாமும் டானும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு நீதித்துறை நிர்வாக ( பாதுகாப்பு) சட்டத்தின்கீழ், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஒவ்வொருவருக்கும் மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 100,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.