சட்டவிரோதமாக 1,000 கிலோகிராம் காய்கறிகளை இறக்குமதி செய்தவர்களுக்கு 9,000 வெள்ளி அபராதம்

குடைமிளகாய், பூண்டு போன்ற காய்கறிகளைச் சட்டவிரோதமாகத் தருவித்த இரண்டு இறக்குமதியாளர்களுக்கு மொத்தம் 9,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பழம், காய்கறிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் ‘செங் லீ இம்பெக்ஸ்’ நிறுவனத்திற்கும், ‘எவர் ஷைன் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ்டபள்ஸ்’ நிறுவனத்தின் தனி உரிமையாளரான  59 வயது இங் சூ டியாங் என்பவருக்கும் முறையே 6,000 வெள்ளி அபராதமும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவித்துள்ளது. 

2018ஆம் ஆண்டு மே மாதத்தில், இரண்டு வெவ்வேறு சோதனைகளின்போது ‘செங் லீ’ நிறுவனமும் இங் சூ டியாங்கும் குறிப்பிடப்பட்ட அளவுக்கு அதிகமாக முறையே 200 கிலோகிராம் மற்றும் 51 கிலோகிராம் காய்கறிகளை மலேசியாவிலிருந்து தருவித்திருந்ததை ஏவிஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே ஆண்டு ஜூலை மாதத்தில், ‘செங் லீ’ நிறுவனம் இதுபோல மேலும் 753 கிலோகிராம் காய்கறிகளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்திருந்ததை ஏவிஏ கண்டுபிடித்தது. அந்தக் காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டதாக ஏவிஏ தெரிவித்தது.

அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து இந்தக் காய்கறிகள் தருவிக்கப்பட்டதால் அவை அபாயகரமானவை என்றது ஏவிஏ. சிங்கப்பூருக்குள் வரும் உணவு இறக்குமதிகள், உணவுத் தரநிலைகளையும் நிபந்தனைகளையும் நிறைவு செய்யவேண்டும் என்று ஏவிஏ கூறியது. உரிமம் வைத்திருக்கும் இறக்குமதியாளர்கள் மட்டுமே உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து தருவிக்கலாம் என்றும் அது சொன்னது.

சட்டவிரோதமாக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.