'ஆர்சிஇபி' எனப்படும் வட்டாரப் பரந்த பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இவ்வாண்டுக்குள் நிறைவடையுமா என்பதை ஆசியாவில் நிகழவிருக்கும் பல்வேறு முக்கியமான தேர்தல்கள் நிர்ணயிக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் புதன்கிழமை (மார்ச் 20) தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் நடைபெற்ற மதிய உணவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் 50க்கும் அதிகமான வர்த்தகத் தலைவர்களிடம் திரு சான் உரையாற்றியபோது அவ்வாறு கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் இணையவிருக்கும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகியவை இவ்வாண்டு மார்ச் முதல் மே வரை பொதுத்தேர்தல்களை நடத்த உள்ளன.
மே மாதத்திற்குள் இந்தத் தேர்தல்கள் அனைத்தும் முடியும். அதன்பிறகுதான், ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அரசியல் விருப்பம் இந்நாட்டு அரசாங்கங்களுக்கு உள்ளதா என்பதை அறியமுடியும் என்று திரு சான் கூறினார். வாஷிங்டனுக்கு அதிகாரபூர்வ பயணத்திற்காகச் சென்றிருக்கும் திரு சான் இன்று வீடு திரும்புவார்.
'ஆர்சிஇபி' ஒப்பந்தம் பொருளியல் ஆதாயங்களைப் பற்றியது மட்டுமல்ல என்றார் திரு சான். உலக நாடுகள் ஒன்றுகூடி பன்னாட்டு வர்த்தக முறையின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தவேண்டிய அவசரநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதற்கு ஓர் ஆதாரம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
அனைத்துலக வர்த்தகத்தில் 30 விழுக்காட்டை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும். ஆனால், 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதற்கான பேச்சுவார்த்தைகளில் இழுபறிகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. ஒப்பந்தத்தின் 18 அத்தியாயங்களில் இதுவரை ஏழு மட்டுமே நிறைவடைந்துள்ளன.

