நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் சிங்கப்பூரரின் மகன் பலி

நியூசிலாந்தில் தற்போது வசிக்கும் சிங்கப்பூரர் திருவாட்டி நுரைனி அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் அல் நூர் பள்ளிவாசலுக்குத் தனது மகனுடன் சென்றார். அவர்களின் சமய வழக்கப்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஒதுக்கப்படும் தொழுகை இடங்களுக்கு அவ்விருவரும் சென்றனர்.

பெண்களுக்கான தொழுகை இடத்தில் இருந்த திருவாட்டி நுரைனிக்குத் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அவர் சிறிய அறை ஒன்றுக்குள் சென்று ஒளிந்துகொண்டார். தனது மகனான 14 வயது சயத் மில்னிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர் பயத்தில் உறைந்திருந்தார்.

துப்பாக்கி சசுடும் சத்தம் ஓய்ந்த பின்னர் அவர் அந்த அறையிலிருந்து வெளியேறி தனது மகனைத் தேட முயன்றார். ஆனால் திருவாட்டி நுரைனியால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் மாண்டதாக அடுத்த நாள் உறுதி செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அல் நூர் பள்ளிவாசலிலும் லின்வூட் இஸ்லாமிய நடுவத்திலும் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். அவர்களில் சயதும் ஒருவர். 

தாக்குதலை நடத்திய பிரெண்டன் டெரன்ட் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.