கள்ள நோட்டு பயன்படுத்த முயன்றவருக்கு சிறைத் தண்டனை

கள்ள நோட்டு பயன்படுத்த முயன்றது உட்பட பல குற்றங்களைப் புரிந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்குச் சில கள்ள நோட்டுகள் கிடைத்ததை அடுத்து 23 வயது அன்சன் டான் சின் சியாங் போலிசாரிடம் அதுகுறித்து தெரிவிக்கவில்லை.
மாறாக, போலி $10,000 நோட்டை நாணய மாற்றுநரிடம் மாற்ற அவர் முயன்றார். அந்த முயற்சி தோல்வியில்  முடிய, அந்த நோட்டைப் பயன்படுத்தி தங்கச் சங்கிலி ஒன்றை வாங்க அவர் முற்பட்டார்.
டான் பயன்படுத்துவது போலி நோட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலிசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. டானுக்கு  நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு ஆறு பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.