மொசாம்பிக்கில் புயல்: செஞ்சிலுவைச் சங்கம் $121,200 உதவி

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், மொசாம்பிக் நாட்டில் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள S$121,200 (US$90,000) நன்கொடை அளிக்கிறது. 
அந்த நாட்டில் கொடூரமான புயல் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டது. வெள்ளம் முதலான பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. 
நன்கொடையாக வழங்கப்படும் பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடம், சுகாதாரப் பராமரிப்பு, தண்ணீர், கழிவுநீர் அகற்று வசதிகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் என்று இந்தச் சங்கம் நேற்று     அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 
மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் இடாய் என்ற புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எந்த அளவுக்குப் பாதிப்பு என்று இன்னமும் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் பல இடங்களில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். நிவாரணப் பணிகள் முழுமூச்சாக நடந்து வருகின்றன. தேவை ஏற்பட்டால் பேரிடர் நிவாரண குழு ஒன்றை அனுப்பவும் இந்தச் சங்கம் ஆயத்தமாக இருக்கிறது.