ஜோகூரில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை - இன்னும் சில ஆண்டுகளில்

சிங்கப்பூரிலிருந்து தண்ணீர் வாங்குவதை மட்டுமே நம்பியிருக்காமல் தனது சொந்த குடிநீர்வளத்தை நிர்வாகிக்க ஜோகூர் மாநிலம் முற்படுவதாக அதன் முதலமைச்சர் ஓஸ்மான் சப்பியான் தெரிவித்திருக்கிறார். தண்ணீர் சுத்திகரிப்புக்கான புதிய ஆலைகள் இதற்கென்றே அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற சிங்கப்பூரை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான யோசனைகளை மாநில அரசாங்கம், மலேசியாவின் மத்திய அரசாங்கத்திடம் பகிர்ந்து வருவதாகத் திரு சப்பியான் கூறினார். “இது பற்றிய சில திட்டங்களை நான் சமர்ப்பித்ததுடன் பிரதமர் மகாதீர் முகம்மதிடம் பேசியும் இருக்கிறேன்,” என்றார் திரு சப்பியான். 

அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் ஜோகூரில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூருடன் செய்யப்பட்டுள்ள 1962 தண்ணீர் ஒப்பந்தத்தின்படி, ஜோகூர் ஒரு நாளுக்கு 5 மில்லியன் கெலன் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு கெலன் தண்ணீருக்கு 50 சென் (17 சிங்கப்பூர் காசுகள்) என்ற விலையில் சிங்கப்பூரிடமிருந்து வாங்கலாம்.