சிங்கப்பூரில் மலேசியர் ஒருவருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றம் செய்துள்ளதாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்ட மலேசியர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சாங்கி சிறையில் வெள்ளிக்கிழமையன்று 29 வயது மைக்கல் காரிங்கிற்கு அந்தத் தண்டனை அளிக்கப்பட்டதாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

மைக்கல்   காரிங் மலேசியாவின் சரவாக்   மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரும் டோனி இம்பா என்ற மற்றொரு சரவாக்கியரும் சில குண்டர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தபோது ஒருவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றனர். அவர்கள் மேலும் மூவரைக் காயப்படுத்தினர். இந்தச் சம்பவம் 2010ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

கொல்லப்பட்ட ஆடவரின் கபாலத்தில் கடுமையான முறிவு ஏற்பட்டது. அவரது இடது கையும் வெட்டப்பட்டது. மேலும் அவரது கழுத்தில் மிக ஆழமான வெட்டுக் காயமும் இருந்ததாகப் பிரேதப் பரிசோதனையின்போது தெரிய வந்தது. இதன் தொடர்பில் இம்பாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காரிங்கின் தண்டனையைக் குறைக்குமாறு சிங்கப்பூரிடம் கடிதம் வழியாகக் கேட்கப்படும் என்று மலேசிய அரசாங்கம் கூறியிருந்ததாக ‘த ஸ்டார்’ தெரிவித்தது.