சுடச் சுடச் செய்திகள்

அமைச்சர் சான்: தென்கிழக்காசியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும்

அமெரிக்கா தென்கிழக்காசியாவுடன் தொடர்ந்து இணைந்திருக்கவேண்டும் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்திருக்கிறார். அவர் மேற்கொண்டிருந்த அதிகாரபூர்வ வா‌ஷிங்டன் பயணம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

“அமெரிக்காவின் நிலவியல் சார்ந்த பரந்த அரசியல் இலக்குகளில் தென்கிழக்காசியா அதிமுக்கியமான அங்கத்தை வகிக்கிறது. எனவே, பொருளியல் ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அமெரிக்கா சிங்கப்பூருடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும்,” என்று திரு சான் கூறினார்.

ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவி வரும் இவ்வேளையில் திரு சானின் கருத்துகள் வெளிவந்துள்ளன. இத்தகைய போட்டிக்கு மத்தியிலும் சிங்கப்பூரின் அரசியல், பொருளியல் நிலைப்பாடுகள், நிலவியல் சார்ந்த அரசியல் அக்கறைகளைக் காட்டிலும் கொள்கைகளாலும் பொருளியல் சிந்தனைகளாலும் வழிநடத்தப்படும் என்று திரு சான் கூறினார்.

திரு சான் தனது அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்காவுடனான உள்கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஆசியாவுக்கான முதலீடுகளையும் உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் இந்த ஒப்பந்தம் மேம்படுத்த உள்ளது. அமெரிக்காவின் திட்டங்களுக்கு மட்டுமின்றி சீனா வழிநடத்தும் ‘பிஆர்ஐ’ திட்டங்களுக்கும் நிதி மற்றும் சட்ட நிபுணத்துவ ஆதரவை சிங்கப்பூர் அளிக்க முடியும் என்று திரு சான் கூறினார்.

“அமெரிக்காவும் சீனாவும் சிங்கப்பூரை நம்பகமான பங்காளியாகக் கருதுகின்றன. பொருளியல் அடிப்படையில் மட்டும் நாம் அனைத்துத் திட்டங்களையும் மதிப்பிடுகிறோம்,”  என்று திரு சான் கூறினார். 

தொழில்நுட்பம் குறித்து சிங்கப்பூர் கொண்டுள்ள நிலைப்பாட்டைப் பற்றியும் திரு சான் பேசினார். எந்தத் தொழில்நுட்ப முறையைத் தழுவினாலும் பாதுகாப்பு, மீள்திறன், நம்பகத்தன்மை, துடிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும் என அவர் கூறினார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon