சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் போலிசால் தேடப்பட்டவர் கடத்தப்பட்டார்

ஏமாற்றுக் குற்றத்திற்காக சிங்கப்பூர் போலிசால் தேடப்பட்டு வந்தவர், ஆட்கடத்தல் கும்பலின் துணையுடன் சிங்கப்பூரை விட்டுத் தப்ப முயன்றார். ஆனால், அந்த அறுவர் கும்பல் அவரையே கடத்தி, அவரது குடும்பத்திடம் இருந்து $80,000 பணம் பறித்தது.
கோ சுன் கியட், 41, என்ற அந்த சிங்கப்பூரர் கடந்த 2017  ஆகஸ்ட் 17ஆம் தேதி கடல்வழியாக சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்றார். முன்னதாக, அவர் பல்வேறு மோசடிக் குற்றங்களுக்காக வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகளால் அவ்வாண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளியில் இருந்தபோது சிங்கப்பூரில் இருந்து கள்ளத் தனமாக வெளியேற அவர் திட்டமிட்டார். அதற்காக 33 வயதான ஜேம்ஸ் இங் என்ற மலேசியரின் உதவியை அவர் நாடினார்.
மலேசியாவைச் சென்றடைந்ததும் அவரை பங்களா ஒன்றில் அடைத்து வைத்து, அடித்து உதைத்த அந்தக் கும்பல், அவரை விடுவிக்க வேண்டுமெனில் $550,000 தரவேண்டும் என அவரது குடும்பத்தை மிரட்டியது. பின்னர் ஒருவழியாக $80,000க்கு அக்கும்பல் ஒப்புக்கொண்டது.
அதே நாள் நள்ளிரவு 12.15 மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கோவின் தந்தையிடம் இருந்து அந்தக் கும்பல் பணத்தைப் பெற்றுக்கொண்டது. பின்னர் அந்தப் பணத்தை ஜோகூருக்குக் கொண்டு வந்து தரும்படி ஆண்ட்ரூ இயோ என்ற ஆடவரை அக்கும்பல் கேட்டுக் கொண்டது. அவரும் அவ்வாறே செய்ததாகக் கூறப்பட்டது.
மறுநாள் மாலையில் தம் மகன் கடத்தப்பட்டது குறித்து கோவின் தந்தை போலிசில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ இயோவிற்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது பிணையில் வெளியில் இருக்கும் அவர் இம்மாதம் 28ஆம் தேதியில் இருந்து சிறைவாசத்தைத் தொடங்குவார்.
தப்பியோட முயன்ற கோ மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையில் இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon