தரவு நிர்வாகம்: அரசாங்கம் மறுஆய்வு

தரவு கசிந்தது, தகவல்கள் தவறாகக் கையாளப்பட்டது எனப் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தரவு நிர்வாகம் குறித்து அரசாங்கம் மறுஆய்வு செய்து வருகிறது.
“அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தற்போது அரசாங்கத்தின் தரவு நிர்வாக முறையை மறுஆய்வு செய்து வருகிறது. இது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கக் குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரத்த நன்கொடையாளர்கள் 800,000 பேர் குறித்த தகவல்கள் இரு மாதங்களுக்கு மேல் இணையத்தில் காணப் பட்டது தொடர்பிலும் தீவிரமாக  விசாரிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அரசாங்க அமைப்புகள், கல்வி நிலையங்களின் ஊழியர்களின் மின்னஞ்சல் ரகசியத் தகவல்கள், 19,000த்திற்கும் மேற்பட்ட வங்கி அட்டைத் தகவல்கள் ஆகியவற்றை இணைய ஊடுருவிகள் விற்பனைக்கு விட்டிருந்ததாக நேற்று முன்தினம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் சிங்ஹெல்த் தரவுத் தளம் ஊடுருவப்பட்டு பிரதமர் லீ சியன் லூங் உட்பட 1.5 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப்பட்டன. அண்மையில் மிக்கி ஃபெரேரா புரோச்செஸ்  என்ற அமெரிக்கர் 14,200 எச்ஐவி நோயாளிகளின் விவரங்களை இணையத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.