வரவுசெலவுத் திட்டம் 2019:  சிங்கப்பூரர்கள் ஆதரவு

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூரர்களில் 80%க்கும் அதிகமானவர்கள் மெர்டேக்கா தலைமுறை உதவித் திட்டத்துக்கு ஆதரவைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். 
இருந்தாலும், சேவைத்துறையில் படிப்படியாக வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் குறைப்பது என்று அரசாங்கம் எடுத்து இருக்கும் முடிவுக்கு மக்களிடம் ஆதரவு குறைவாக இருக்கிறது. ரீச் எனப்படும் அரசாங்க கருத்தறியும் பிரிவு இந்த விவரங்களைத் தெரிவித்தது. புதிய வரவுசெலவுத் திட்டம் பற்றி 4,500 சிங்கப்பூரர்களிடம் கருத்துகள் திரட்டப்பட்டன. 
அவர்களில் 2,601 பேரை ரீச் அமைப்பு நேருக்கு நேர் சந்தித்து கருத்துகளைக் கேட்டது. சிங்கப்பூரர்கள் வரவுசெலவுத் திட்டம் 2019ல் இடம்பெற்றுள்ளவற்றைப் பொதுவாக ஆதரிக்கிறார்கள் என்பது இந்தக் கருத்தெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.