அலெக்சாண்ட்ரா ரோட்டில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்; துயரத்தில் குடும்பம்

அலெக்சாண்ட்ரா ரோட்டில் டாக்சி மோதி உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்தினர் இந்த மரணம் குறித்த விளக்கங்களை நாடுகின்றனர்.

66 வயது திருவாட்டி டேங் மீதும் மற்றொரு 32 வயது பெண் மீதும் எஸ்எம்ஆர்டி டாக்சி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மோதியது. விபத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் டாக்சியின் 72 வயது ஓட்டுநர் சுயநினைவு இழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த 32 வயது பெண் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் திருவாட்டி  டேங் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மாண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

“நாங்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் இருக்கிறோம்,” என்று திருவாட்டி டேங்கின் மகள் குமாரி லிம் தெரிவித்தார். விபத்து எப்படி நடந்தது என்பதைப் பற்றிய மேல் விவரங்கள் தங்களுக்குத் தெரியவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என்று குமாரி லிம் குறிப்பிட்டார். அந்நிறுவனம் தங்களுடன் இன்னமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது நம்புவதற்குக் கடினமாக இருப்பதாக குமாரி லிம் தெரிவித்தார்.