கேலாங் சாலை விபத்தில் மூவர் காயம்

கேலாங்கில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு கார்கள், ஒரு டாக்சி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டன (படம்). 
ஞாயிறு காலை 9.59 மணிக்கு சிம்ஸ் அவென்யூ, அல்ஜுனிட் ரோடு சந்திப்பில் நிகழ்ந்த இவ்விபத்து பற்றி போலிசுக்குத் தகவல் கிடைத்தது. 69 வயதான மோட்டார் சைக்கிளோட்டி, கார்களில் ஒன்றில் இருந்த 49, 80 வயதான இரு பயணிகள் ஆகியோர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
விபத்தில் தூக்கி எறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட் டிக்கு முகத்திலும், கைகளிலும் கை முட்டிகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இரு பெண் பயணிகளுக்கு முதுகிலும் தோற்பட்டையிலும் வலி இருந்தது.
அல்ஜுனிட் ரோட்டின் இருபுறங்களிலும் போக்குவரத்து சென்றுகொண்டிருந்தபோது, மஞ்சள் நிற கார் ஒன்று சிம்ஸ் அவென்யூ சந்திப்பை நோக்கி வேகமாக வந்தபோது விபத்து நிகழ்ந்தது என்று மற்றொரு காருக்குள் இருந்த கேமராவில் பதிவான காணொளி காட்டுகிறது. இதன் தொடர்பில் அந்த காரின் 56 வயது ஓட்டுநர் போலிஸ் விசாரணையில் உதவி வருகிறார்.