சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் மீது முட்டை ஒன்றை வீசி எறிவது பற்றி ஃபேஸ்புக்கில் உரையாடிக்கொண்டிருந்த இருவர் மீது போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு செய்யப்போவதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கருத்துப்பதிவு செய்த 20 வயது ஆடவருக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டுள்ளதாக போலிசார் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தனர். அந்த ஆடவரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் மற்றோர் ஆடவர் பதிவு செய்தார். அவருக்கு 47 வயது.
"இத்தகைய மிரட்டல்களை போலிஸ் கடுமையாகக் கருதுகிறது. அதன்படியே விசாரணை நடத்தப்படும்," என்றனர் போலிசார்.
குற்றவியல் தண்டனைச் சட்டம் '267சி' பிரிவின்படி மின் குறிப்பைக் கொண்டு வன்முறையைத் தூண்ட முயலும் குற்றத்தின்கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இக்குற்றத்திற்காக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
நியூசிலாந்தில் மார்ச் 15ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஆஸ்திரேலிய செனட்டர் ஃப்ரேசர் என்னிங் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளைக் காட்டும் 'சேனல் நியூஸ்ஏஷியா' செய்தித்தளப் பதிவு ஒன்றில் இந்த இரண்டு ஆடவர்களும் இவ்வாறு பதிவு செய்தனர். தாக்குதலுக்கான பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திய என்னிங் மீது இளையர் ஒருவர் முட்டை வீசி எறிவதை அந்தப் பதிவு காட்டியது. "சத்தியமாக நான் இதனை கா. சண்முகத்திடம் செய்யவேண்டும்," என்று ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் எட்மண்ட் சோங் எழுதினார். 'தி இன்டிபென்டன்ட்' என்ற சமூக-அரசியல் வலைத்தளம் இவரது கருத்துகளைக் காட்டும் படங்களைப் பதிவேற்றம் செய்தது.
"அந்த முட்டையை நானே வழங்குகிறேன்," என்று ஜாக் இங் என்ற மற்றோர் இணையவாசி, சோங்கின் கருத்துக்குப் பதில் தெரிவித்தார். "தாராளமாகச் செய்யுங்கள்," என்றார் லுயிஸ் இங் என்பவர்.
"மூன்று நாட்களுக்கு முன்னர், அங் மோ கியோவைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள் என் வீட்டுக்குச் சென்றிருந்தனர். கா. சண்முகம் மீது முட்டையை வீசுவது பற்றி நான் கூறியது தொடர்பாக அவர்கள் வந்திருந்தனர். எனக்குள் நிறைய உணர்ச்சிகள் ஓடுகின்றன. தீங்கு விளைவிக்காத, நேரடியான என் கருத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்வினை ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்று சோங், 'கம்ப்ளெய்ன்ட் சிங்கப்பூர்' (Complaint Singapore) என்ற ஃபேஸ்புக் குழுவில் பதிவு செய்தார்.
அங் மோ கியோ போலிஸ் பிரிவு தலைமையகத்தின் விசாரணை அதிகாரியைக் காண உத்தரவிடும் கடிதம் ஒன்றை அதிகாரிகள் தனது வீட்டுக்கதவில் விட்டுச் சென்றதாக அவர் கூறினார். அந்தக் கடிதத்தையும் அவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

