மத்திய வர்த்தக வட்டாரத்தில் இன்னும் அதிகமான வீடுகள் கட்டப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் (யூஆர்ஏ) தெரிவித்திருக்கிறது. மரினா சவுத் வட்டாரத்தில் 2,000 தனியார் வீடுகளை அமைக்கத் திட்டம் இருப்பதாக ஆணையம் கூறியது. டெளன்டவுன் மற்றும் ரோச்சோர் வட்டாரங்களிலும் புதிய வீடுகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவில் மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஆள் நடமாட்டம் முற்றிலும் இல்லாத நிலையை இந்தத் திட்டம் மாற்றும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது. "பலரின் வேலையிடங்களுக்கு அருகே இந்த வீடுகள் அமைக்கப்படுவதால் அவர்களது பயண நேரம் குறையும்," என்றும் ஆணையம் கூறியது.
நன்கு பழக்கப்பட்ட, முதிர்ச்சியடைந்த வட்டாரங்களுக்குப் புத்துயிரூட்டுவதற்கான வரைவு பெருந்திட்டத்தில் இந்த ஏற்பாடு அங்கம் வகிக்கிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் நிலப் பயன்பாட்டுத் திட்டமாக இந்த வரைவு பெருந்திட்டம் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திட்டம் மறுஆய்வு செய்யப்படும்.

