மிகவும் பரபரப்பான பாதையாக சிங்கப்பூர்-கோலாலம்பூர் விமானத் தடம்

மிகவும் பரபரப்பான பாதையாக சிங்கப்பூர்-கோலாலம்பூர் விமானத் தடம்

1 mins read

சிங்கப்பூர், கோலாலம்பூர் இடையிலான தடம் நாடுகளுக்கிடையேயான மிகவும் பரபரப்பான விமானத் தடமாக அமைந்திருப்பதாக நேற்று முன் தினம் ஓஏஜி நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான கருத்துக்கணிப்பு தெரிவித்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த நிலையை இந்தத் தடம் தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை இந்தத் தடத்தில் பயணித்த விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த தர நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இந்தத் தடத்தில் 30,187 விமானப் பயணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதற்கு அடுத்தபடியாக ஹாங்காங்-தைப்பே இடையே 28,447 விமானப் பயணங்களும் சிங்கப்பூர்-ஜகார்த்தா இடையே 27,046 பயணங்களும் நிகழ்ந்துள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த இந்தத் தடங்களின் தர நிலவரம் கடந்த ஆண்டைப்போலவே உள்ளன. பரபரப்பான அனைத்துலக விமானத் தடங்களின் வரிசையில் முதல் 20 இடங்களில் 15 ஆசியாவில் உள்ளன. உலக அளவில் அதிக பரபரப்பான விமானத் தடம் தென்கொரியாவின் ஜெஜு அனைத்துலக விமான நிலையத்துக்கும் அந்நாட்டின் கிம்போ அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடைப்பட்டது. கடந்த 12 மாதங் களில் அந்தத் தடத்தில் இடம்பெற்ற விமானப் பயணங் களின் எண்ணிக்கை 79,460. அடுத்தபடியாக மெல்போர்ன், சிட்னி இடையே 54,102 பயணங்கள் நிகழ்ந்தன.