சிங்கப்பூருக்குள் $60,000க்கு மேலாகக் கொண்டு வந்ததைத் தெரிவிக்கவில்லை; ஆடவருக்கு $5,000 அபராதம்

சிங்கப்பூருக்குள் $60,000க்கு மேலாகக் கொண்டு வந்ததைத் தெரிவிக்கவில்லை; ஆடவருக்கு $5,000 அபராதம்

1 mins read
d5c28643-a985-4e9f-a3dd-7f19e4b4eb7b
-

சிங்கப்பூருக்குள் நுழையும்போது கையில் 60,000 வெள்ளிக்கு மேலான ரொக்கம் வைத்திருந்ததாகத் தெரிவிக்கத் தவறிய 28 வயது ஆடவருக்குப் புதன்கிழமை (மார்ச் 27) 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஓர் ஆடவர் 20,000 வெள்ளிக்கு மேலான ரொக்கம் வைத்திருப்பதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, டீ சென் பாங் என்ற அந்த ஆடவர் மார்ச் 7ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டதாக போலிசார் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

டீ மலேசியக் குடியுரிமை பெற்றவர் எனத் தெரிய வருகிறது.

சிங்கப்பூரிலிருந்து அல்லது சிங்கப்பூருக்கு 20,000 வெள்ளிக்கு மேலான ரொக்கப்பணத்தை அல்லது அதற்கு நிகரான மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தை எடுத்துச்செல்வோரும் கொண்டு வருவோரும் சட்டப்படி சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தவேண்டும்.

டீ சிங்கப்பூர் நாணயங்களும் மலேசிய நாணயங்களும் வைத்திருந்தார். இந்த ரொக்கப் பணத்தைப் பற்றி பொறுப்பதிகாரியிடம் அவர் தெரியப்படுத்தத் தவறினார்.

இக்குற்றத்தைப் புரிவோருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 50,000 வெள்ளி வரையிலான அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இருபதாயிரம் வெள்ளிக்கு மேலான ரொக்கப் பணத்தின் நடமாட்டத்தைத் தெரியப்படுத்தத் தவறுவது சட்டப்படி குற்றம் என்பதைப் போலிசார் தங்களது அறிக்கையில் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்கள்.