உணவகம் ஒன்றின் உணவுத் தட்டுகளுக்கு இடையே ஓர் எலி திரிந்துகொண்டிருந்ததைக் காட்டும் காணொளி வெளிவந்ததை அடுத்து, இச்சம்பவத்தை விசாரிக்க உள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. இந்தக் காணொளி புதன்கிழமை (மார்ச் 27) ஃபேஸ்புக் தளத்தில் வெளிவந்தது. தோ பாயோ லோரோங் 8ல் உள்ள 'லீ குவாங் கீ டியோச்சியூ குவிசீன்' உணவகத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக வான்பாவ் செய்தி இதழ் குறிப்பிட்டது.
ஆயினும், தூய்மைக்கான விதிமுறைகளை மிக கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து வருவதாக உணவகத்தின் நிர்வாகி ஒருவர் வான்பாவிடம் தெரிவித்தார்.
எலியைக் கண்ட உணவக ஊழியர் ஒருவர் உடனே அதுபற்றி தனது முதலாளியிடம் தெரிவித்ததாகவும் உணவு மேசையிலிருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாகவும் அந்த நிர்வாகி கூறினார். பின்னர், உரிய ரசாயனப் பொருட்களைக் கொண்டு அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடை, ஒரு நாளுக்கு மூன்று முறை சுத்தம் செய்யப்படுவதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். அத்துடன், மாதத்திற்கு ஒருமுறை பூச்சிக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்று உணவகத்தைச் சுத்தம் செய்யும் என்றும் அவர் சொன்னார். "இந்த உணவகத்தில் பத்துக்கும் அதிகமான எலிப்பொறிகள் உள்ளன. இங்கு எந்தவோர் எலியையும் நான் இதுவரை பார்த்ததே இல்லை," என்று அவர் கூறினார்.

