செயிண்ட் ஜான்ஸ், புலாவ் ஹந்து தீவுகள் பொதுமக்களுக்கு திறப்பு

செயிண்ட் ஜான்ஸ், புலாவ் ஹந்து தீவுகள் பொதுமக்களுக்கு திறப்பு

2 mins read

சிங்கப்பூரின் பிரதான தீவுக்குத் தெற்கே உள்ள செயிண்ட் ஜான்ஸ், புலாவ் ஹந்து இவ்விரு தீவுகள் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன. அந்தத் தீவுகளிலிருந்து 'அஸ்பெஸ்டஸ்' எனப்படும் கல்நாரை முழுமையாக அகற்றும் பணி நிறைவடைந்துள்ளதாக அத்தீவுகளை நிர்வகிக்கும் சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது. நுரையீரல் கோளாறுகளையும் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடிய கல்நார் கடந்த ஆண்டு ஏப்ரலில் செயிண்ட் ஜான்ஸ் தீவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. புலாவ் ஹந்துவிலும் கூசு தீவிலும் பின்னர் அது காணப்பட்டது. செயிண்ட் ஜான்ஸ் தீவில் கல்நாரை அகற்றும் பணிகளுக்கு இடையில் பொது முகாம்களுக்கான மேம்பாட்டுப் பணிகளும் தொடர்ந்தன. மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் இவ்வாண்டு ஜூன் மாதம் பொது முகாமிடும் வசதிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆணையம் கூறியது. அந்த முகாம்களில் தங்குவதற்கு முன்பதிவு செய்துகொள்ள பொதுமக்கள் ஆணையத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.

லாரியுடன் மோதிக்கொண்ட மின் ஸ்கூட்டர் ஓட்டுநர் மருத்துவமனையில் பிடோக் வட்டாரத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் லாரியும் மின் ஸ்கூட்டரும் விபத்துக்குள்ளானதில் 18 வயது மின் ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் காயமுற்றார். பிடோக் நார்த் ரோடு, பிடோக் நார்த் அவென்யூ 1 சாலை சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து மாலை 5 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. காயமடைந்த மின் ஸ்கூட்டர் ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து காணொளியில் பதிவானது. ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து அக்காணொளி பரவலாக பகிரப்பட்டது. மின் ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது லாரி அவர்மீது மோதியது. இதில் மின் ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலை சந்திப்பின் மற்றொரு புறம் விழுந்தார். அந்த நேரத்தில் போக்குவரத்து விளக்கு லாரி ஓட்டுநருக்கு சாதகமாக இருந்ததாகத் தெரிகிறது. கீழே விழுந்து காயமுற்றவருக்கு பொதுமக்கள் சிலர் உதவும் காட்சிகள் மற்றொரு காணொளியில் பதிவாகின. இந்த விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.