முன்னைய மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் செங் போக்கின் அரசியல் கட்சி அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்சி கடந்த வியாழக்கிழமை (மார்ச் 28) பதிவு செய்யப்பட்டதாகச் சங்கங்கள் பதிவகத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது பற்றிய விரிவான அறிவிப்பு வரும் வாரத்திற்குள் வெளிவரும் என்று அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்சி, தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகச் சந்திப்பு ஒன்றை நடத்தும் என்று 'சாவ் பாவ்' இதழ் தெரிவித்துள்ளது. கட்சியைப் பதிவு செய்ய 76 வயது டாக்டர் டான் ஜனவரி 16ஆம் தேதி விண்ணப்பித்தார். "தன்னைப்போல் யோசிக்கும் சிங்கப்பூரர்கள்" 11 பேர் இந்தக் கட்சியில் இணைந்திருப்பதாக அவர் ஜனவரி 18ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

