சோதனைச்சாவடிகளில் ஐம்பது வாகனங்கள் மலேசியாவிலிருந்து நுழையவிடாமல் தடுப்பு

சோதனைச்சாவடிகளில் ஐம்பது வாகனங்கள் மலேசியாவிலிருந்து நுழையவிடாமல் தடுப்பு

2 mins read
08bcde7d-4ae9-4398-8708-46380a1dbf56
-

ஜோகூர் பாலம் வழியாகவும் துவாஸ் சோதனைச்சாவடி வழியாகவும் வந்திருந்த ஐம்பது வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் தங்கள் அபராதங்களைக் கட்டாதது இதற்குக் காரணம்.இருந்தபோதும் இதனால் சோதனைச்சாவடிகளில் வாகனங்களைச் சோதித்து அவற்றை வழியனுப்பும் நேரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம், தடை செய்யப்பட்ட வாகனங்கள், தனியாக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்துமிடங்களுக்குத் திசைத்திருப்பப்பட்டன.

போக்குவரத்து, வாகன நிறுத்தம் அல்லது வாகன எரிவாயு வெளியாக்கம் (vehicular emission) தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த அபராதங்களைக் கட்டத் தவறிய வாகனமோட்டிகளின் வாகனங்களை சிங்கப்பூருக்குள் நுழைய தடை செய்யும் முடிவை சிங்கப்பூர் அதிகாரிகள் பிப்ரவரி மாதமே அறிவித்தனர். சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்தது. மேலும் இந்தத் தகவலை அறிவிக்கும் துண்டு பிரசுரங்கள் சோதனைச்சாவடிகளில் விநியோகிக்கப்பட்டன. சோதனைச்சாவடிகளிலுள்ள அறிவிப்புப் பலகைகளிலும் இந்தச் செய்தி குறிப்பிடப்பட்டது.

பிப்ரவரியில் கிடைக்கப்பெற்ற ஆக அண்மை தகவலின்படி, வெளிநாட்டு வாகனமோட்டிகளால் கட்டப்படவேண்டிய அபராதங்களின் எண்ணிக்கை 400,000. அவற்றின் மொத்த பெறுமானம் 32 மில்லியன் வெள்ளி.

சிங்கப்பூரின் நிலவழி சோதனைச்சாவடிகளில் கூட்ட நெரிசல் வழக்கத்தைவிட மோசமாக உள்ளதாக மலேசியாவின் 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது.

இந்தப் புதிய கொள்கையின் தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணிக்கப்போவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது. அபராதங்களைக் கட்டவேண்டிய வாகனமோட்டிகளின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் ஆணையம் கூறியது. உச்ச நேரப் பயணங்கள், பள்ளி விடுமுறைகள், தற்போது நடைபெறும் 'சின் மிங்' விழா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சோதனைச்சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் அது சொன்னது.