சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள எனிவீல் சைக்கிள் நிறுவனம், சேவைக்கு விடப்படும் தனது சைக்கிள்களின் எண்ணிக்கையைப் பத்து மடங்கு அதிகரிக்கத் திட்டமிடுகிறது. மேலும், 1,000 சைக்கிள்களை சேவைக்கு விட மூவ் டெக்னோலஜி என்ற புதிய நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
'ஓஃபோ' நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக நிலப்போக்குவரத்து ஆணையம் அந்நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவித்தது. சீனாவின் பெய்ஜின் நகரில் தளம் கொண்டுள்ள ஓஃபோ கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் செயல்படுவதற்கான அனுமதியைப் பெற்றது. அப்போது அது 25,000 சைக்கிள்களை சேவையில் ஈடுபடுத்தியது.ஆனால், அதன் உரிமம் பிப்ரவரியில் ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சைக்கிள்களை நிறுத்த வகைசெய்யும் 'கியூஆர் குறியீடு' முறையை அந்நிறுவனம் செயல்படுத்தாதது உள்ளிட்ட சில காரணங்களால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 'மோபைக்' சிங்கப்பூரிலிருந்து வெளியேறுவதாகக் கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து 'ஓஃபோ' பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.

