தோ பாயோவிலுள்ள 'சிக்கின் ரைஸ்' உணவுக் கடையில் சமைக்கப்படாத கோழிக்குள் எலி ஒன்று இருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக சிங்கப்பூர் உணவு வாரியம் தெரிவித்துள்ளது. சமைக்கப்படாத கோழிகள் வைக்கப்பட்ட இரண்டு பைகளில் ஒன்றில் எலி இருந்ததைக் காட்டும் காணொளி ரெடிட்டிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. தோ பாயோ லோரோங் நான்கிலுள்ள புளோக் 95லுள்ள காப்பிக் கடை மூடப்பட்டிருந்தபோது அதற்கு வெளியே கோழிப் பைகளைக் கொண்ட ஒரு கூடை வைக்கப்பட்டிருந்தது. காணொளி எடுத்தவர் அந்தக் கூடையைக் காலால் தட்டியபோது எலி வெளிவந்ததை அந்தக் காணொளி காட்டியது.
மூலப்பொருட்களை சரியாக வைப்பது உள்ளிட்ட உணவு சுகாதார தரநிலைகளை உணவு விநியோகிப்பாளர்கள் பின்பற்றவேண்டும் என்றது உணவு வாரியம். இந்தத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படாவிட்டால் வாரியம் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். தமது கடைக்கு அனுப்பப்படும் கோழிகளில் இதுவரை எந்த எலியையும் கண்டதில்லை என்று கடை உரிமையாளர் 34 வயது திரு ஆட வான்பாவ் நாளிதழிடம் தெரிவித்தார். இந்தக் கோழியை தனக்கு வழங்கிய விநியோகஸ்தரிடம் இழப்பீடு கேட்கப்போவதாகவும் வேறு விநியோகஸ்தரை நாடப்போவதாகவும் அவர் கூறினார்.
சமைக்கப்படாத இறைச்சி வெளியில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை குளிர்பெட்டிக்குள்ளாவது வைக்கப்படவேண்டும் என்றும் பைகளில் அவ்வாறு வைக்கப்பட்டிருந்தது தவறு என்றும் இணையவாசிகள் பலர் கூறியுள்ளனர். தவறு செய்யும் உணவுக் கடை உரிமையாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் https://csp.sfa.gov.sg/feedback என்ற இணையத்தளத்தின் வழி சிங்கப்பூர் உணவு வாரியத்திடன் புகார் செய்யலாம்.

