தேசிய பல்கலைக்கழகத்தில் நோய்வாய்ப்பட்ட 22 மாணவர்கள்

தேசிய பல்கலைக்கழகத்தில் நோய்வாய்ப்பட்ட 22 மாணவர்கள்

1 mins read
dca16f81-c5df-416a-b110-92001ae27697
-

தேசிய பல்கலைக்கழகத்தில் தங்குமிட வசதியைக் கொண்ட பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்ட இருபதுக்கும் அதிகமான மாணவர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி (gastroenteritis) தொற்றியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 'ரிட்ஜ் வியூ ரெசிடென்ஷல் காலேஜ்' பள்ளியில் அந்த மாணவர்கள் உணவு உண்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மலாய் உணவுக் கடையிலிருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

'சார்ட்வெல்ஸ்' நிறுவனம் நடத்தும் அந்தச் சிற்றுண்டிச் சாலையில் மேற்கத்திய உணவும் ஆசிய உணவும் பரிமாறப்பட்டன. தங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் மருத்துவ சிகிச்சையை நாட வேண்டியிருந்ததாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர். இரைப்பை குடல் அழற்சி சம்பவத்தைச் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் விசாரித்து வருவதாகக் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்குக் கிடைத்த ஆக அண்மை விவரப்படி இதுபோல் 22 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வாந்தியாலும் பேதியாலும் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது குணமடைந்து வருவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' கூறியது.

'சார்ட்வெல்ஸ்' நிறுவனத்திடம் இந்த விவகாரம் உடனே தெரிவிக்கப்பட்டதாக தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளியின் சமையலறை மூடப்பட்டுள்ளது. சிற்றுண்டிச் சாலை வளாகம் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டது. மேலும், உணவு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 'சார்ட்வெல்ஸின்' சமையலறை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பல்கலைக்கழகம் கூறியது.