புதிய துறைமுக வரம்புகளைச் செயல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தும் சிங்கப்பூர், மலேசியா

புதிய துறைமுக வரம்புகளைச் செயல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தும் சிங்கப்பூர், மலேசியா

1 mins read
45f97bb8-20d6-4017-aac2-2d74ece1b9e6
-

சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களது புதிய துறைமுக வரம்புகளைச் செயல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. சிங்கப்பூரும் மலேசியாவும் முறையே 2018 அக்டோபர் 25க்கும் 2018 டிசம்பர் 6க்கும் முந்திய காலக்கட்டத்தில் நிலவிய துறைமுக வரம்புகளை மீண்டும் பின்பற்றும். இது திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணியிலிருந்து நடப்புக்கு வந்ததாகக் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் துவாஸ் துறைமுக எல்லைப்பகுதியும் ஜோகூர் பாருவின் தஞ்சுங் பியாய் துறைமுகத்தின் எல்லைப்பகுதியும் ஒன்றன்மேல் ஒன்று இருப்பது தொடர்பான கடல் எல்லை சர்ச்சையைப் பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பரிந்துரைகளில் ஒன்றுடன் இந்தத் தற்காலிக நிறுத்தம் தொடர்புடையது என்று கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

பதற்றத்தைத் தணிப்பதற்காக மார்ச் 14ஆம் தேதி சிங்கப்பூர், மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் இது குறித்து இணங்கியதாக ஆணையம் கூறியது.

கடந்த அக்டோபர் மாதம் ஜோகூர் பாரு துறைமுக வரம்புகளை மலேசியா சுயேட்சையாக விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூர், தனது கடல் எல்லைக்குள் தனது துறைமுக வரம்புகளை விரிவுபடுத்தியது. இருந்தபோதும் மார்ச் மாதத்தில் இரு நாடுகளும் தத்தம் துறைமுகங்களின் முன்னைய வரம்புகளைச் செயல்படுத்த இணங்கியுள்ளன.

சிங்கப்பூர்-மலேசிய தலைவர்களுக்கு இடையிலான ஓய்வுத்தளச் சந்திப்புக்கு முன்னரே இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.