விசாக தினத்தை ஒட்டிய நீண்ட வாரயிறுதியில் அட்மிரல்டி ரயில் நிலையத்திற்கும் இயோ சூ காங் ரயில் நிலையத்திற்கும் இடையே ஐந்து நிலையங்கள் வரை மூடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருக்கிறது. கென்பரா நிலையத்தின் பயண மாற்றத்திற்கான ரயில் தடத்தைக் (crossover track) கட்டுவதற்கு இந்த ஏற்பாடு வழி செய்கிறது.
இந்த 72 மீட்டர் பயண மாற்ற ரயில் தடம், செம்பவாங் நிலையத்திற்கும் கென்பரா நிலையத்திற்கும் இடையே கட்டப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. வடக்கு-தெற்கு ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் இதன் வழியாக ஒரு தடத்திலிருந்து மற்றொரு தடத்திற்கு மாறலாம் என்றது ஆணையம்.
அட்மிரல்டி நிலையமும் செம்பவாங் நிலையமும் மே 18, 19 தேதிகளில் மூடப்படும். அட்மிரல்டி ரயில் நிலையத்திற்கும் இயோ சூ காங் ரயில் நிலையத்திற்கும் இடையில் இருக்கும் ஐந்து நிலையங்கள் மே 20 தேதி மூடப்படும்.

