புக்கிட் தீமா விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த 57 வயது ஆடவர் ஒருவர் தமது காரின் கட்டுப்பாட்டை இழந்தார். புக்கிட் தீமா விரைவுச்சாலையில், உட்லண்ட்ஸ் துணைச் சாலையை நோக்கிச் செல்லும் டெய்ரி ஃபார்ம் ரோட்டில் காலை 7.40 மணிக்கு ஏற்பட்ட கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து போலிசுக்குத் தகவல் கிடைத்தது. அந்தக் காரின் ஓட்டுநர் இங் டெங் ஃபோங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதுபோதையில் காரோட்டியதற்காக அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். வலப்பக்கத்தில் சேதமுற்ற வெள்ளி நிறக் காரின் புகைப்படம் ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சாலையின் எதிர் திசையில் வந்த கார் திடீரென நின்றது என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். மதுபோதையில் காரோட்டிய முதல் முறை குற்றவாளி களுக்கு $1,000 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப் படலாம் அல்லது வாகனமோட்டுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்படலாம். அது அவர்களின் சுவாசச் சோதனையின் முடிவைப் பொறுத்திருக்கிறது. மறுமுறை குற்றம் புரிபவர்களுக்கு $30,000 வரை அபராதம், மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை ஆகியவை விதிக்கப்படலாம். மரணமோ கடுமையான காயமோ ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தால் அவருக்கு ஆறு பிரம்படிகள் வரை கொடுக்கப்படலாம் என்றும் போலிஸ் கூறுகிறது.
மதுபோதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது
1 mins read

