வெளியுறவு அமைச்சு : சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் எந்த மலேசிய அரசாங்கக் கப்பலும் நங்கூரமிடவில்லை

வெளியுறவு அமைச்சு : சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் எந்த மலேசிய அரசாங்கக் கப்பலும் நங்கூரமிடவில்லை

2 mins read
c31921d6-8153-4590-a59c-2f6002d8eb95
-

சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் எந்த மலேசியக் கப்பலும் நங்கூரமிடவில்லை என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

"எங்கள் அரசுரிமையை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். அந்த வட்டாரத்தில் உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து எடுப்போம்," என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தார். ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும் தங்களது எல்லைப்பகுதிகளை சிங்கப்பூரும் மலேசியாவும் தற்காலிகமாக ரத்து செய்ததை அடுத்து வெளியுறவு அமைச்சின் அறிக்கை வெளிவந்துள்ளது.

2018 அக்டோபர் 25க்கும் 2018 டிசம்பர் 6க்கும் முந்திய காலக்கட்டத்தில் நிலவிய துறைமுக வரம்புகளை இவ்விரு நாடுகளும் மீண்டும் பின்பற்றுகின்றன. திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு இந்த முடிவு நடப்புக்கு வந்தது. கடல் எல்லை சர்ச்சையைப் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பரிந்துரைகளில் ஒன்றுடன் இந்தத் தற்காலிக நிறுத்தம் தொடர்புடையது என்று கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று தெரிவித்தது. அண்மை சில மாதங்களாக மலேசியக் கப்பல்கள் சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் காணப்பட்டு வந்தன. துவாஸுக்கு அருகிலுள்ள சிங்கப்பூரின் நீர்ப்பகுதியில் மலேசியாவின் இரண்டு அரசாங்கக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்திடம் ஏப்ரல் 1ஆம் தேதி தெரிவித்தார்.

கடந்த மாதம் டாக்டர் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் பதற்றத்தைத் தணிக்கவும் கடல் எல்லை நிர்மாணத்திற்கு வழிவகுக்கவும் இணங்கின. மேலும், சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதியில் அரசாங்கக் கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும் கப்பல்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

சிங்கப்பூர் பிரதமர் திரு லீ, மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதை செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.