தனது வீட்டு வாசற் படிக்கட்டுகள் அமைந்திருக்கும் இடத்தை மீன் தொட்டியாக மாற்றிய வீட்டு உரிமையாளர், அதனை அப்படியே வைத்திருக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) விடுத்திருந்த மேல் முறையீட்டைக் கழகம் நிராகரித்துள்ளது.
தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 41ல் வசிக்கும் அந்த ஆடவர், தனது 'கொய்' மீன்களை வைப்பதற்காக வீட்டின் முன்வாசல் கதவுக்கு வெளியிலுள்ள படிக்கட்டுகளின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடிச் சட்டங்களைப் பொருத்தி அந்த இடத்தை மீன் தொட்டியாக மாற்றினார். இவ்வாறு செய்வதற்கு வீவகவின் அனுமதி தேவை என்று அப்போது தனக்குத் தெரியாது என்று அந்த ஆடவர் கூறினார்.
ஆயினும், பாதுகாப்பு காரணங்களால் அந்தத் தொட்டியை அவர் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று வீவக இவ்வாண்டு ஜனவரி மாதம் தெரிவித்தது. அந்த முடிவை வீவக மறுபரிசீலனை செய்ய ஆடவர் மேல் முறையீடு செய்தார். அந்த ஆடவரின் மேல்முறையீட்டை நிராகரிப்பதாக வீவக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தது.
"வீட்டு வாசலுக்கு வெளியிலுள்ள படிக்கட்டுகள் பொதுச்சொத்தாக உள்ளன...வீட்டு உரிமையாளர்கள் செய்ய விரும்பும் மாற்றங்கள் தங்கள் வீடுகளுக்குள் உட்பட்டு இருக்கவேண்டும். அத்தகைய மாற்றங்கள் பொதுச்சொத்தில் செய்யப்படக்கூடாது," என்று வீவக கூறியது.

