சுடச் சுடச் செய்திகள்

விமானப் பயணப்பெட்டியின் எடையை குறைத்து மதிப்பிட லஞ்சம் பெற்றதாக நான்கு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

விமானப் பயணப் பெட்டிகளை எடைகுறைத்து காண்பிக்க லஞ்சம் பெற்றதாக வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் நால்வர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஸ்கூட், டைகர் ஏர்வேஸ் ஆகிய விமானங்களுக்கானப் பயணப் பெட்டிகளைக் கையாண்டபோது அவர்கள் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எந்த இடத்தில் குற்றம் நிகழ்ந்தது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்காதபோதிலும் கைம்மாறாக சிகரெட்டுகளையும் ரொக்கப் பணத்தையும் பெற்றதாகக் கூறப்பட்டது.

குற்றம் நிகழ்ந்தபோது முகம்மது ஹாரிஸ் முகம்மது அலி, 23, ஜெரிஸிம் கிருபாய் ராஜ் டாவேட், 35, ஆகிய இரு சிங்கப்பூரர்களும் சேட்ஸ் ஏ‌ஷியா பசிபிக் ஸ்டார் நிறுவனத்துக்காகப் பணியாற்றினர்.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அகமது என்பவரிடமிருந்து ஹாரிஸ் 66 வெள்ளி மதிப்புள்ள ஆறு சிகரெட் பாக்கெட்டுகளை லஞ்சமாகப் பெற்றார். அதேபோல ஜெரிஸிம் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் கஜேந்திரன் ரமேஷ் என்பவரிடமிருந்து அவர் 630 வெள்ளி லஞ்சமாகப் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் மலிவுக் கட்டண விமான நிறுனங்களுக்காக இயங்கி வரும் சேவை நிறுனம் இவ்விருவரையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் இந்திய நாட்டவர்கள். படேல் ஹிதேஷ்குமார் சந்துபாய், 37, அய்யாதுரை கருணாநிதி, 47, ஆகிய அவ்விருவரும் யுபிடிஎஸ் என்னும் தளவாடச் சேவை நிறுவனத்தின் ஊழியர்கள்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அய்யாதுரை கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சரவணன் முத்துராஜா என்பவரிடமிருந்து 500 வெள்ளி லஞ்சம் பெற்றதாகவும் அதேபோல 2016 ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் கோபால் கிருஷ்ண ராஜு என்பவரிடமிருந்து படேல் 800 வெள்ளி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக கோபால் கிருஷ்ண ராஜு மீதும் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கும் $2,500 முதல் $5,000 வரையிலான தொகையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
“இந்த லஞ்சக் குற்றம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் உன்னத கௌரவத்தைச் சீர்குலைப்பதோடு நமது விமானப் பயண பாதுகாப்பைக் கீழறுப்பதாகவும் உள்ளது,” என்று லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon