குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் போலிசாரிடமிருந்து காரில் தப்ப முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்தது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியது, ஆயுதங்களை வைத்திருந்தது ஆகியவற்றின் தொடர்பில் அந்தக் காரை ஓட்டிய 21 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். காரில் அமர்ந்திருந்த மற்றோர் ஆடவரும் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை காலை 11.15 மணிக்கு, மெய் லிங் ஸ்திரீட்டில் போக்குவரத்துப் போலிசார் அந்தக் காரைச் சோதனை செய்துகொண்டிருந்தபோது, காரின் ஓட்டுநர் திடீரென காரை விரைவாக ஓட்டிச் சென்றதாக போலிசார் தெரிவித்தனர். வழியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இடித்தபோதும் கார் ஓட்டுநர் நிற்காமல் தொடர்ந்து ஓட்டினார். போலிசார் விடாமல் தங்கள் வாகனங்களில் அந்தக் காரைப் பின்தொடர்ந்தனர். இறுதியில், குவீன்ஸ்வேயிலிருந்து அலெக்ஸாண்ட்ரா ரோட்டுக்குச் செல்லும் வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் தனது காரை நிறுத்தினார்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் வெளிவரவில்லை.
சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

