பயங்கரவாதத்திற்கு எதிரான பதில் நடவடிக்கைகள் வலுவாக்கம்

பயங்கரவாதத்திற்கு எதிரான பதில் நடவடிக்கைகள் வலுவாக்கம்

2 mins read
41192052-f3c5-4e25-b201-e8313ee1c803
-

பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கப்பூர் எடுத்துவரும் பதில் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் விரைவாக நடவடிக்கை எடுக்கக்கூடிய போலிஸ் குழுக்கள் பணியில் அமர்த்தப்படுவர். ஆர்ச்சர்ட் ரோடு, மரினா பே போன்ற பிரபலமான இடங்களில் பண்டிகை காலங்களில் சம்பவ இடத்திலேயே சம்பவங்களைக் கையாளும் குழுவின் (In-Situ Reaction Team) கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். 2017 டிசம்பர் மாதத்தில் இந்தக் குழு முதன்முதலாகப் பணியில் அமர்த்தப்பட்டது.

இந்த முடிவை வியாழக்கிழமை அறிவித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், பயங்கரவாதத்தைத் தடுக்கும் ஆற்றலுக்கான தேவையை வலியுறுத்தினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதற்கு உதாரணமாகக் கடந்த மாதம் நடந்த கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டைத் திரு சண்முகம் சுட்டினார்.

"நியூசிலாந்தில் இது நடந்தால் எங்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். தாக்குதல் நிகழும் என்று நீங்கள் எதிர்பார்த்திராத இடங்களில் நியூசிலாந்தும் ஒன்று," என்றார் அமைச்சர் சண்முகம்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் நடந்த போலிஸ் படையின் வருடாந்திர வேலைத்திட்ட மாநாட்டில் உரையாற்றியபோது திரு சண்முகம் இவ்வாறு கூறினார். தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் போலிஸ் படை எப்படி அறிவார்ந்த படையாகப் பரிணமித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுவது இந்த மாநாட்டின் நோக்கம். ஜார்விஸ் எனப்படும் தேடுதல் தளம், மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்று. விசாரணை அதிகாரிகள் சிங்கப்பூர் போலிஸ் படையின் தரவுத்தளங்களிலிருந்து தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை ஒரு முறை தேடும்போது பெற்றுக்கொள்ள ஜார்விஸ் உதவுகிறது. இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்தத் தேடல் பணி ஐந்து நிமிடங்களுக்குக் குறையும் என்று அந்த மாநாட்டின்போது தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து மக்கள் சம்பவத்திற்குப் பிறகு நடந்துகொண்ட விதம், அந்நாட்டின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டனின் தலைமைத்துவம் ஆகியவற்றையும் திரு சண்முகம் பாராட்டினார். நியூசிலாந்தைப் பார்த்து சிங்கப்பூர் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். தொழில்நுட்பக் கருவிகளின் மேம்பாடும் பயிற்சியும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் நடவடிக்கை எடுப்பதற்கான நேரத்தைக் குறைக்கும் என்று திரு சண்முகம் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து முதல் சில நிமிடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கை ஆக முக்கியமானது என்றார் அவர்.

போலிசார் இங்குள்ள குற்றச்செயல்களைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்தாலும் கவனத்திற்கான தேவை இன்னமும் இருப்பதாகத் திரு சண்முகம் தெரிவித்தார். அண்மையில் வன்முறை சம்பவங்கள், குறிப்பாக கத்திக்குத்துகள், பிரிட்டனில் பெருகி வருவதை அவர் சுட்டினார்.

"போலிசாரின் வளங்களைத் தொடர்ந்து அதிகரிப்பதிலும் சட்டங்களை நோக்கத்திற்குத் தகுந்தவாறு புதுப்பிப்பதிலும் கடப்பாடு உள்ளது. போலிசாரின் காரியங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்," என்றார் திரு சண்முகம்.