இணைய விமர்சனங்களுக்குப் பதிலளித்த வழக்கறிஞர் சங்கம்

இணைய விமர்சனங்களுக்குப் பதிலளித்த வழக்கறிஞர் சங்கம்

1 mins read
e022cdac-38ff-4be7-b111-2bca54a7acd1
வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கிரெகரி விஜயேந்திரன். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

இணையப் பொய்யுரைக்கு எதிரான மசோதா குறித்து வழக்கறிஞர் சங்கம் கருத்துக்கூறாமல் இருப்பதைக் குறைகூறும் இணைய விமர்சனங்களுக்கு அந்தச் சங்கம் பதிலளித்திருக்கிறது. வழக்கறிஞர் சங்கம் தனது கருத்துகளை அரசாங்கத்துடன் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ளும் என்று சங்கத்தின் தலைவர் கிரெகரி விஜயேந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

"வழக்கமாக நாங்கள் இத்தகைய கலந்துரையாடல்களை பொதுப்படையாக வெளியிடமாட்டோம். இது தொடர்பான செயல்முறை மிகவும் ரகசியமானது," என்று திரு விஜயேந்திரன் தெரிவித்தார்.

இந்த மசோதா குறித்து வழக்கறிஞர் சங்கம் எதுவுமே சொல்லவில்லை என்று 'த ஆன்லைன் சிட்டிசன்' தளம் கடந்த வாரம் தான் வெளியிட்ட தலையங்கக் கட்டுரையில் கூறியது. சங்கத்தின் மெளனம் சம்மதத்திற்கான அறிகுறியா என்றும் அக்கட்டுரை கேள்வி எழுப்பியது.

மசோதா குறித்த தனது கருத்துகளைத் தெரிவிக்க வழக்கறிஞர் சங்கம் அழைக்கப்பட்டிருப்பதாக திரு விஜயேந்திரன் கூறினார். அரசாங்கத்துடன் சங்கம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா, இணையத்தில் பொய்யான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்த முற்படுகிறது. தீய நோக்கங்களைக் கொண்டவர்கள் உருவாக்கும் புரளிகளிடமிருந்து சமுதாயத்தைப் பாதுகாக்கவும் இது முனைகிறது எனச் சட்ட அமைச்சு தெரிவித்தது. அடுத்து வரும் மாதங்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.