ஐஎஸ்ஸுக்கு சிங்கப்பூரர் பண உதவி

ஐஎஸ் அமைப்பினரின் கொள்கை பரப்பு முயற்சிகளுக்குப் பண உதவி செய்த சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக உள்துறை அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது. 

தளவாட நிறுவனம் ஒன்றின் முன்னைய நிர்வாக இயக்குநர் 35 வயது இம்ரான் காஸிம், ஐஎஸ் கொள்கைப் பரப்புக்கான பதிப்புக்கு 450 வெள்ளி வழங்கப்பட்டது. “எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி, பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பணம் கொடுப்பது மிகக் கடுமையான குற்றச்செயல்,” என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

கடந்த 2017 ஆகஸ்டு மாதம் முதல் அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இம்ரானின் குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும் வரை அவர் அச்சட்டத்தின்படி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்றது அமைச்சு. 

சிறையில் இருக்கும் மற்ற கைதிகளிடம் இம்ரான் தனது கொள்கைளை போதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அவர் அங்கு தனிமைப்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சிரியாவுக்குச் செல்ல இம்ரான் இரண்டு முறை முயன்றதாகவும் பிலிப்பீன்சில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களுடன் சேர எண்ணம் கொண்டிருந்ததாகவும் ஐ.எஸ் அமைப்பு தெரிவித்தது.

பயங்கரவாதச் செயல்களுக்காக சேவைகள், சொத்துக்கள் ஆகியவற்றை வழங்கும் குற்றத்தைப் புரிபவர் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம். அதனுடன் அவர்களுக்கு சிறைத்தண்டனையுடன் 500, 000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.