சிங்கப்பூர் இசைக்குழுவின் நிகழ்ச்சி மலேசியாவில் ரத்து

சிங்கப்பூர் இசைக்குழுவின் நிகழ்ச்சி மலேசியாவில் ரத்து

1 mins read
a93ec931-4fc6-4a62-bd0d-d835bc2be2ce
-

மலேசியாவில் நடைபெறவிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த 'டிவாவ்ரோர்' இசைக்குழுவின் நிகழ்ச்சியை அந்நாட்டின் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி கோலாலம்பூருக்கு அருகிலுள்ள செராஸில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில் நடப்பது குறித்த அக்கறைகளின் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

'பிளாக் மெட்டல்' பாணியைச் சேர்ந்த பாடல்களை வாசிக்கும் இக்குழுவினரின் நிகழ்ச்சி ரத்தான செய்தியை அதன் ஏற்பாட்டாளர் 'கோட்லார்த் ரெக்கார்ட்ஸ்' (Goatlordth Records) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு உழைப்புக்குப் பிறகு இவ்வாறு ஆனது மிகுந்த வேதனையை அளிப்பதாக 'கோட்லார்த் ரெக்கார்ட்ஸ்' கூறியது.

"ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் இந்நிகழ்ச்சியின் ரத்து எங்களுக்குப் பண ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் தங்களுக்கு விருப்பமான இசையைக் கேட்கும் வாய்ப்பை இழந்திருக்கின்றனர்," என்று 'கோட்லார்த் ரெக்கார்ட்ஸ்' தெரிவித்தது.

கிறிஸ்துவ புனித நாட்களில் ஒன்றான ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையில் இந்த இசைக்குழு நிகழ்ச்சியை நடத்துவது கிறிஸ்துவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்று மலேசியாவின் தேவாலயக் கழகம் திங்கட்கிழமை தெரிவித்தது. இசைக்குழுவினர் வாசிக்கும் பாடல் வரிகளில் பல கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக இருப்பதாகக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹெர்மன் சாஸ்திரி தெரிவித்தார். .