பிரான்சின் 'நோட்ர டேம்' தேவாலயத்தில் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து வருத்தமடைவதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். நேற்று மாலை நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்த தங்களது வருத்தத்தை வெளிப்படுத்திய உலகத்தலைவர்களில் பிரதமர் லீயும் ஒருவர்.
கிறிஸ்துவர்கள் புனிதமாகக் கருதும் புனித வாரத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது வேதனையை இன்னும் அதிகரிப்பதாகத் திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் எழுதினார்.
"அரிய பொக்கிஷங்களைக் கொண்டுள்ள தங்களது தேசிய சின்னத்திற்கு ஏற்பட்ட இந்தச் சேதம் குறித்து பிரஞ்சு மக்கள் உணரும் இழப்பை நானும் உணர்கிறேன்," என்று திரு லீ தமது பதிவில் குறிப்பிட்டார்.
"850 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிஸ் நகரிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்த சம்பவங்களுக்கு 'நோட்ர டேம்' தேவாலயம் சாட்சியாக நின்று வந்தது. மனித மரபுடைமையின் ஓர் அங்கமாகவும், தேவாலயத்தை வடிவமைத்து அதனைக் கட்டி முடித்து அங்கு வழிபட்ட பல்வேறு தலைமுறையினரின் சமய நம்பிக்கை மற்றும் ஆன்மாவின் வெளிப்பாடாகவும் இந்தத் தேவாலயம் திகழ்ந்து வருகிறது. காலப்போக்கில், சீரமைத்துக் கட்டி முடிக்கப்பட்ட 'நோட்ர டேம்', பாரிஸின் அடிவானத்தை நிரப்பும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் கூறினார்.
பிரான்சின் தலைநகர் பாரிஸிலுள்ள இந்தத் தேவாலயம் எரிந்த சம்பவம் அந்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

