'பருவநிலை செயல்பாடு' ஆண்டில் மறுபயனீடு குறைந்தது

'பருவநிலை செயல்பாடு' ஆண்டில் மறுபயனீடு குறைந்தது

1 mins read
8bd9dcd7-ae53-4b29-bffc-5d1a85deaa7f
-

சிங்கப்பூரின் பருவநிலை செயல்பாடு ஆண்டாக அறிவிக்கப்பட்ட கடந்தாண்டின் ஒட்டுமொத்த மறுபயனீடு விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் குறைவாக உள்ளது. ஒட்டுமொத்த மறுபயனீடு விகிதம் 2017ஆம் ஆண்டில் இருந்த 61 விழுக்காட்டிலிருந்து கடந்தாண்டில் 60 விழுக்காட்டுக்குக் குறைந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. மரத்தால் செய்யப்பட்ட பொருட்களின் மறுபயனீடு குறைந்தது இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆயினும், வீடமைப்பு குடியிருப்புகள், பள்ளிகள், ராணுவ முகாம்கள், பெட்ரோல் நிலையங்கள், கடை வீடுகள், வழிபாட்டு இடங்கள் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கும் உள்ளகப் பிரிவுகளின் மறுபயனீடு சற்றே உயர்ந்தது. 2017ஆம் ஆண்டில் 21 விழுக்காடாக இருந்த அது கடந்தாண்டு 22 விழுக்காடு உயர்ந்தது. இதனை 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடாக உயர்த்த சிங்கப்பூர் திட்டமிடுகிறது. தேசிய மறுபயனீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த ஊழியர்களால் அல்லது 'காராங் குனி' எனப்படும் பழைய பொருட்களை வாங்கி விற்பவர்களால் மறுபயனீடு செய்யப்படக்கூடிய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

தேசிய மறுபயனீட்டு திட்டத்தில் சேகரிக்கப்பட்ட மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களின் எடை, 2014ஆம் ஆண்டின் 44,400 டன்களிலிருந்து கடந்தாண்டு 43,400 டன்களுக்குக் குறைந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.