கண்காணிப்பின்றி நீச்சல் குளத்தில் விடப்பட்ட ஆறு வயது சிறுமி மரணம்

கண்காணிப்பின்றி நீச்சல் குளத்தில் விடப்பட்ட ஆறு வயது சிறுமி மரணம்

1 mins read

சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று செந்தோசாவின் 'ஃபெஸ்டிவ் ஹோட்டல்' நீச்சல்குளத்தில் கண்காணிப்பின்றி தனியே விடப்பட்ட ஆறு வயது சிறுமி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மூளைக்குப் போதுமான பிராணவாயுவும் ரத்த ஓட்டமும் இல்லாததாலும் நீரில் மூழ்கியதன் தாக்கத்தால் நிமோனியா ஏற்பட்டதாலும் சிறுமி உயிரிழந்ததாக நேற்று மரண விசாரணை அதிகாரி கூறினார். சிறுமி தன் உயரத்திற்குச் சற்று ஆழமான நீர்ப்பகுதியில் தனியே விடப்பட்டார். நீச்சல் தெரியாத நிலையில் ஒரு மிதவை மட்டும்தான் அவரிடம் இருந்தது. இதற்கிடையே சிறுமியால் நீந்த முடியும் என்றும் மிதவையின் உதவியால் சிறுமி பாதுகாப்பாக இருப்பார் என்றும் சிறுமியின் உறவினர் நம்பினார். அதனால் சிறுமியைத் தனியாக விட்டுவிட்டு 'ஜக்கூஸி' தொட்டிக்குத் தம் மூன்று வயது மகனுடன் சென்றுவிட்டார். பின்னர் நீச்சல் குளத்தில் அசைவின்றி மிதந்துகொண்டிருந்த சிறுமியை அங்கு வந்த சிறுமியின் பாட்டி பார்த்துவிட்டு உதவிக்கு அழைத்தார். கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி 10 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.