வெளிநாட்டினருக்குக் கடப்பிதழ் முத்திரை தேவையில்லை

சிங்கப்பூரைவிட்டுப் புறப்படும் வெளிநாட்டினரின் கடப்பிதழ்களில் முத்திரை இடவேண்டிய தேவை இருக்காது என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 22) முதல் நடப்புக்கு வரும் என்று ஆணையம் கூறியது.

சோதனைச் சாவடிகளின் செயல்முறைகளைத் தரநிலைப்படுத்தவும் நாட்டைவிட்டு வெளியேறுவோருக்கான பரிசீலனை முறையின் செயலாக்கத்தை மேம்படுத்தவும் ஆணையம் எடுத்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

இந்தத் தகவல் வெளிநாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

2016ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து, ‘பயோஸ்கிரீன்’ அமைப்பில் தங்கள் விரல் ரேகைகளைப் பதிவு செய்துள்ள வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்குள் தானியக்கத் தடங்கள் வழியாக நுழைகின்றனர். அவர்களது கடப்பிதழ்களில் முத்திரைகள் குத்தப்படவேண்டிய தேவை இல்லை.