சுடச் சுடச் செய்திகள்

‘மெக்டோனல்ட்ஸ்’ பர்கர் உணவில் பிளாஸ்டிக் துண்டு

தனது பர்கருக்குள் பிளாஸ்டிக் துண்டு இருந்ததாகக் கூறும் ‘மெக்டோனல்ட்ஸ்’ வாடிக்கையாளர் இது பற்றி போலிசாரிடம் புகார் செய்திருக்கிறார்.

திரு கிறிஸ்டஃபர் கோ ‘மெக்டோனல்ட்ஸ்’ உணவகத்தின் ‘ஜூரோங் போல்’ கிளையில் அந்த பர்கரை கடந்த வாரம் வாங்கியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது. பர்கரை மென்றுகொண்டிருந்தபோது பிளாஸ்டிக் துண்டைக் கடித்த பிறகு தான் வாந்தி எடுத்ததாக திரு கோ கூறினார். திரு கோ அடுத்த நாள் மருத்துவரைக் காண ஜூரோங் பலதுறை மருந்தகத்திற்குச் சென்றபோது அவருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு கொண்டுக்கப்பட்டது. அதன் பிறகு அவர் தமக்கு நேர்ந்தது குறித்து போலிசாரிடம் புகார் செய்தார்.

திங்கட்கிழமை மாலை 6.25 மணிக்கு, 1 யுவான் சிங் ரோட்டில் உள்ள ‘மெக்டோனல்ட்ஸ்’ஸில் 12.65 வெள்ளிக்கு பார்கருடன் வேறு சில பதார்த்தங்களை வாங்கியதாக 46 வயது திரு கோ தெரிவித்தார். பர்கர் மீது உருகி ஒட்டியிருந்த பிளாஸ்டிக் துண்டு பெரிதாக இருந்தததாக அவர் தெரிவித்தார். அந்த பர்கரைக் காட்டும் படங்கள் ‘ஸ்டோம்ப்’ செய்தித் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் பற்றி மெக்டோனல்ட்ஸ் உணவகம் அறிவதாகவும் உணவகம் திரு கோவுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அதன் பேச்சாளர் புதன்கிழமை தெரிவித்தார். தகவல் அறிந்தவுடன் நடந்தது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.