குற்ற ஒப்புதலை திடீரென மீட்டுக்கொண்டார்

மாயாஜால வித்தைக்காரர் ஒருவர் தனக்கு தண்டனை விதிக்கப்படயிருந்த நாளில் தனது குற்ற ஒப்புதலை திடீரென மீட்டுக்கொண்டார். 38 வயது எஸ். சந்திரன் புதன்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையானார். ‘பிஐசி’ எனப்படும் உற்பத்தித்திறனுக்கும் புத்தாக்கத்திற்குமான கடன் திட்டம் வழியாக 1.1 மில்லியன் வெள்ளி தொகை மோசடியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

குற்றங்களை ஒப்புக்கொண்டதாக முதலில் கூறியிருந்த சந்திரன், வழக்கின் தகவல் அறிக்கையை மறுப்பதாகவும் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை மீட்டுக்கொள்ள விரும்புவதாகவும் மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோவிடம் தெரிவித்தார். அவரது வேண்டுகோளை நீதிபதி ஏற்றார்.

சந்திரனை எந்த வழக்கறிஞரும் பிரதிநிதிக்கவில்லை. மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர், எதற்காக சிகிச்சை பெறுகிறார் என்பதைச் சொல்லவில்லை. ஜூன் 2103ஆம் ஆண்டுக்கும் ஜூலை 2014ஆம் ஆண்டுக்கும் இடையே ‘பிஐசி’ திட்டத்திற்குப் போலியான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 49 பேருக்கு உதவியதாக அவர் நவம்பர் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். தன் மீது சுமத்தப்பட்ட 18 குற்றச்சாட்டுகளை அவர் அப்போது ஒப்புக்கொண்டார்.

அவருக்கு விதிக்கப்படயிருந்த தண்டனையில் மேலும் 40 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

சந்திரனின் நீதிமன்ற விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் மே 9ஆம் தேதி நடைபெறும். அவர் இப்போது 200,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த மோசடியில் சந்திரனின் மனைவி 31 வயது சத்யா அலெக்ஸாண்டர் வின்சன்ட் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்திரன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் அவர் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 50,000 வெள்ளி அபராதத்தை எதிர்நோக்கலாம். மோசடி செய்யப்பட்ட தொகையில் நான்கு மடங்கு அபராதத்தையும் அவர் செலுத்த வேண்டிவரலாம்.