பதினோரு வயதான சிறுமியை வகுப்பறையில் மானபங்கப்படுத்தியதற்காக தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில துணைப்பாட வகுப்பு ஆசிரியருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சிறுமி மிகவும் அச்சத்துடனும் வருத்தத்துடனும் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அந்தச் சம்பவத்தின்போது வேறு இரு சிறுமிகளும் அருகில் இருந்ததாகக் கூறப்பட்டது. 67 வயது சிங்கப்பூரரான அந்த ஆடவர் சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியராக இருந்தார். தம் மீதான மானபங்க குற்றச்சாட்டை அவர் கடந்த திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார். சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி சிறுமிக்கு முதலும் இறுதியுமாக பாடம் நடத்தியபோது இந்தக் குற்றத்தை அவர் செய்ததாகக் கூறப்பட்டது. அவர் தற்காலிக ஆசிரியர் என்று குறிப்பிட்ட பள்ளி, சம்பவ தினத்தன்றே அவரைப் பணிநீக்கம் செய்ததுடன் பள்ளி ஊழியர் ஒருவர், போலிசில் புகார் அளிக்க மாணவியுடன் சென்றதாகவும் கூறப்பட்டது. 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை மானபங்கப் படுத்துவோருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியன விதிக்கப்படலாம்.
சிறுமி மானபங்கம்; துணைப்பாட வகுப்பு ஆசிரியருக்கு 15 மாத சிறை
1 mins read

