45,000 வெள்ளி போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் குற்றங்களின் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் மலேசியர். சுமார் 45,000  வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ன் சுற்றுவட்டாரத்தில் 38 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரது கைப்பைக்குள் இரண்டு ‘ஐஸ்’ போதைப்பொருள் பொட்டலங்கள் இருந்தன. பொட்டலங்களின் மொத்த எடை 276 கிராம். தன்னைக் கைது செய்ய வந்திருந்த அதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல் அந்த ஆடவர் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்ததாகப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

டெக் வை வட்டாரத்திலுள்ள அந்த ஆடவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 80 எக்ஸ்டசி மாத்திரைகள், மூன்று ‘எரிமின்-5’ மாத்திரைகள், 2 கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதே நாளில் 31 வயது மலேசிய ஆடவர் ஒருவரைப் போதைப்பொருள் அதிகாரிகள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்தனர். அவரிடமிருந்து 5,100 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு மறுநாள், 21 வயது சிங்கப்பூர்ப் பெண்ணும் 25 வயது சிங்கப்பூர் ஆடவரும் போதைப்பொருள் குற்றங்களின் தொடர்பில் டெம்பல் ஸ்திரீட்டில் கைது செய்யப்பட்டனர். அந்த இருவரும் சென்றுகொண்டிருந்த காரில் சோதனை நடத்திய அதிகாரிகள், 1.2 கிலோகிராம் கஞ்சாவையும் 80 எக்ஸ்டசி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்துகிறது.