கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

பெண்களின் குளியல் அறையில் இருந்த தேசிய பல்கலைக்கழக மாணவியை மறைவாகக் காணொளி எடுத்திருந்தார் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை மேலும் கடுமையாக்கக் கோரி சுமார் 30,000 பேர் இணைய மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் யூசோஃப் ஹாலில் இந்தச் சம்பவம் நடந்தது.

தனது தவற்றுக்காக அந்த மாணவர் ஒரு பள்ளித் தவணைக்குத் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தை எழுதும்படியும் பல்கலைக்கழகம் அவரிடம் கேட்டிருந்தது.

எனினும், மோனிகா பே என்ற அந்த மாணவியைப் படமெடுத்த மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படவேண்டும் என்று அந்த மனு கோருகிறது. 21,600 பேருக்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட முதல் மனு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மாணவர் தனக்குத் தெரிந்தவர் என்றாலும் அவர் மேலும் தண்டிக்கப்படவேண்டும் என்று குமாரி பே கூறியதாக ‘சண்டே டைம்ஸ்’ தெரிவித்தது.

சம்பவத்தை போலிஸ் விசாரித்ததாகவும் அந்த மாணவனுக்கு 12 மாத நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்தது.