போலிஸ்: திருந்தி வாழும் சாத்தியம் அதிகம் என்பதால் குறைந்த தண்டனை

தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயது மாணவருக்கு நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்ட முடிவை போலிசார், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் விளக்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது செயல் குறித்து வருத்தமடைந்ததாகவும் அவர் திருந்தி வாழும் சாத்தியம் அதிகம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் நடத்தை குறித்த கூடுதலான சில காரணங்கள் இந்த விவகாரத்துடன் தொடர்புடையவை. அவரது கைபேசியில் ஆபாசப் படைப்புகள் இல்லாதது இந்தக் காரணங்களில் ஒன்று,” என்று போலிசார் கூறினர். அந்த இளையர் மீது குற்றவியல் விசாரணை தொடரப்பட்டால் அவரது எதிர்காலம் பாழாகிவிடலாம் என்றனர் போலிசார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலிசார் கூறினர். நிபந்தனை எச்சரிக்கையின்படி, அவர் 12 மாதங்களில் வேறொரு குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது. இல்லாவிடில், அவர் முன்பு செய்திருந்த குற்றத்திற்காகவும் புதிய குற்றச் செயலுக்காகவும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம். இதனால் அவர் சிறை செல்லும் சாத்தியமும் அதிகரிக்கலாம். அந்த ஆடவரின் பெயர் நிக்கலஸ் லிம் என்று பாதிக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே தெரிவித்தார். இந்தத் தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து ‘கிரேட் ஈஸ்டர்ன்’ காப்புறுதி நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணிபுரிந்திருந்த லிம்மை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

ஆடவருக்குச் செல்வாக்குமிக்க பெற்றோர்கள் இருப்பதால் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என்ற தகவல் தவறானது என்று போலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. “இது போன்ற பொய்கள் வெளிவருவது துரதிர்ஷ்டத்திற்கு உரியது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

லிம்மின் தந்தை பொதுப்போக்குவரத்து துறையில் வாகனமோட்டுநர் என்றும் அவரது தாயார் இல்லத்தரசி என்றும் அறிக்கை கூறியது.

கடந்த நவம்பர் மாதத்தில் யூசோஃப் ஹால் தங்கும் விடுதியில் குமாரி பே குளித்துக்கொண்டிருந்ததை மறைவிலிருந்து காணொளி எடுத்த லிம்மின் தண்டனையை மேலும் கடுமையாக்க மாணவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து போலிசின் அறிக்கை வெளிவந்தது.

தொடர்பு மற்றும் புதிய ஊடகத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவியான குமாரி பே கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி குளித்துக்கொண்டிருந்தபோது கதவுக்குக் கீழிருந்து தன்னை யாரோ காணொளி எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்தார். குற்றம் இழைத்த லிம்மிடம் பல்கலைக்கழகம் மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு கேட்டுக்கொண்டது. மேலும் யூசோஃப் ஹாலுக்குள் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் ஒரு தவணைக்கு அவர் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்தத் தண்டனை போதாது என்றார் பாதிக்கப்பட்ட மாணவி. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon