பெங்களூரில் 173 ஸ்கூட் பயணிகள் 14 மணி நேரம் தவிப்பு

பெங்களூரில் 173 ஸ்கூட் பயணிகள் 14 மணி நேரம் தவிப்பு

2 mins read
b553433c-4fe4-4f17-80e0-363d2124d776
-

இந்தியாவில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்ப இருந்த ஸ்கூட் விமானம் போலியான பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணமாக பல மணி நேரம் தாமதமானதில் 173 பயணிகள் பாதிப்படைந்தனர். இந்திய நேரப்படி திங்கட் கிழமை பின்னிரவு 1.20 மணிக்குப் பெங்களூருவில் இருந்து புறப்பட இருந்த 'டிஆர்573' விமானம் 14 மணி நேரம் கழித்து நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கே புறப்பட்டது.

குழந்தைகளை வைத்திருந்த குடும்பங்கள், சிங்கப்பூரிலிருந்து வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய இருந்தவர்கள் உட்பட பயணிகள் அனைவரும் தாமதத்திற்கான காரணம் சொல்லப்படாததால் எரிச்சல் அடைந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.

ஓடுபாதையில் விமானம் மேலே கிளம்ப இருந்த நேரத்தில் விமானத்தின் பயணம் நிறுத்தப் பட்டதாக ஆய்வு, மேம்பாட்டு பொறியியலாளரான பாரத் குமார் சிம்பிலி, 30, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். பயணப்பெட்டி ஒன்றுக்குள் துப்பாக்கி போன்ற பொருள் இருப்பதாகப் பயணி ஒருவர் எச்சரித்ததாகவும் பாதுகாப்பு காரணமாகப் பயணம் தாமதிப்ப தாக சொல்லப்பட்டதாகவும் சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தி யரான திரு பாரத் சொன்னார்.

"அனைவரும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு 10க்கு விமான நிலையத்துக்கு வந்தோம். 10 மணி நேரத்துக்கும் மேலாக உணவோ, தகவல்களோ இல்லாமல் காக்கவைக்கப் பட்டோம்," என்றார் அவர்.

வாய்வழித் தகவல் வழி கிடைத்த பாதுகாப்பு மிரட்டல் காரணமாக பயணி ஒரு வரை விமானத்திலிருந்து இறக்க வேண்டியிருந்தது. சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் காணப்படவில்லை. ஏனைய பயணிகள் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஸ்கூட் பேச்சாளர் கூறினார்.