தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைத்தொகுதியில் குத்தப்பட்ட பாதுகாவல் மேலதிகாரி

2 mins read
725f2f37-b7f0-41e4-9851-0a5378e81041
-

பாதுகாவல் மேலதிகாரி ஒருவரைக் குத்தியதாகக் கூறப்படும் ஆடவர் புதன்கிழமை (ஏப்ரல் 24) நீதிமன்றத்தில் முன்னிலையானார். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டிலுள்ள ராக்ஸி ஸ்குவேர் கடைத்தொகுதியில் ஏப்ரல் 4ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வலம் வருகிறது.

60 வயது பாதுகாவல் மேலதிகாரி ஆன்ட்ரூ லிம் சியேன் என்பவரை ஸ்டுவர்ட் போய்ட் மில்ஸ் என்பவர் முகத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த 47 வயது மில்ஸ்மீது தாக்குதல் மற்றும் தொந்தரவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடைத்தொகுதியிலுள்ள பாதுகாவல் அதிகாரி ஒருவரை அணுகி தன்னால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்று மில்ஸ் அவரிடம் கூறியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. காலதாமதம் ஆனதால் கடைத்தொகுதியின் முன்வாசல் பூட்டப்பட்டுள்ளதாக அந்தப் பாதுகாவல் அதிகாரி கூறினார். ஆனால், பாதுகாவல் அதிகாரியின் விளக்கத்தைக் கேட்க மறுத்த மில்ஸ், அவரது மேலதிகாரியை அழைக்கும்படி அவரை வற்புறுத்தினார். அப்போது அங்கு வந்த திரு லிம், வெளியேறுவதற்கான மற்ற வெளிவாயில்கள் இன்னும் திறந்திருப்பதாகக் கூறியபோதும் மில்ஸ் சமாதானம் அடையவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மில்ஸ் தமக்கு மிக அருகில் நின்றுகொண்டு மிரட்டல் தொணியுடன் பேசிக்கொண்டிருந்ததாகத் திரு லிம் தெரிவித்தார். ஏதேனும் ஆபத்து தனக்கும் நேரலாம் என்று உணர்ந்ததால், தேவைப்பட்டால் காணொளி எடுக்குமாறு திரு லிம் பாதுகாவல் அதிகாரியிடம் சொன்னார். திரு லிம்மை மில்ஸ் தீய சொற்களால் ஏசி அவரைக் குத்தி கீழே இடித்துத் தள்ளியதை அந்த அதிகாரி காணொளி எடுத்தார்.

போலிசாரை அழைத்துக்கொண்டிருந்தபோது மில்ஸ் அங்கிருந்து ஓடியதாகத் திரு லிம் தெரிவித்தார்.

மில்ஸ் மே 15ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும். மற்றொருவரைத் தாக்கிய குற்றத்திற்காக ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.